Sunday, April 28, 2024

எண்ணம் போல் வாழ்க்கை

யாழ்ப்பாணத் தமிழனான என்னால் மேற்பார்வை செய்யப்படும் விருந்தினர் அகத்திற்கு தென்பகுதியைச் சேர்ந்த மக்கள் குழுக்களாக வருவதுண்டு. அவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதியைச் சேர்ந்த தென்பகுதி மக்கள் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு குறைந்தவர்களாக அல்லது அதனை பயன்படுத்த வேண்டிய தேவை அற்றவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் என்னுடன் அறிமுகமாகுவது வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் எனும் ரீதியாக அதாவது எம்மிடம் வந்த வாடிக்கையாளர் ஒருவர் இன்னுமொரு வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்துவார்.

அவர்களுக்கு கூகுள் இருப்பிட அமைவை அனுப்பி பிரியோசனம் இல்லை.

அவ்வாறு வருபவரில் பெரும்பாலானோர் யாழ்ப்பாண நாகவிகாரைக்கு அண்மையில் பேருந்தை நிறுத்தி வைத்துக் கொண்டு என்னை தொடர்பு கொள்வார்கள். சிலர் கூகிள் வரைபடம் மூலம் இருப்பிடம் அறிந்து வருவார்கள். சிறிது காலத்திற்கு முன்னர் வந்த ஒரு குழுவினர் எனக்கு தொடர்பு எடுத்து 

//அபி இன்னே யபனெய டபல் கன்டொருவ இடிரிபிட புடுபிலிமய லங்க.//

அதாவது

// நாங்கள் தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு முன்னால் உள்ளோம் வாங்கோ தம்பி என்றார்கள். //

அடப்பாவிகளா அது திருவள்ளுவர் சிலையடா

இதை அவர்களுக்கு நான் விளங்கப்படுத்த வேண்டுமா ? இவர் திருவள்ளுவர், இவர் எழுதிய திருப்புகழ் உலகப் புகழ் பெற்றது. இவருக்கும் புத்தருக்கும் சம்பந்தம் இல்லை என்று

இல்லை அவர்கள் சொன்ன இடத்திற்கு போய் நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு எனது விருத்தினர் அகத்திற்கு போக வேண்டுமா ?

நான் வழமையாக தாம் சொல்வதே சரி உனக்கு எதுவும் தெரியாது என்று உரைப்பவர்களுடன் தர்க்கம் செய்யப் போவது இல்லை.
ஏன் எனில் அது எருமை மாட்டில் மழை பெய்வது போன்றது.

அதையே இவர்களுக்கும் நான் கடைப்பிடித்தேன்.

எனக்கு என் எண்ணம் நிறைவேறினால் சரி.