Monday, September 15, 2014

பன்சல விஜயம் – ராஜமகா விகாரை கலேவல


எமது நிறுவன ஊழியர்களுடன் 13/09/2014 காலையில் குருணாகல் ராஜமகா விகாரையில் சிரமதானம் செய்வதற்காய் புறப்பட்டேன். விருப்பமில்லா பயணம். காலையிலேயே சிறுதடங்கல் இருந்தும் புறப்பட்ட பயணம் நிறுத்தக்கூடாது என்பதற்காய் விஜயத்தை தொடந்தேன்.


தந்தை தடுக்க, சிற்றன்னை முகம் சுழிக்க, உண்மையில் எனக்கும் மனம் சரியின்றி, மேலதிகாரியின் கட்டாய உத்தரவுக்கமைய புறப்பட்டேன் பன்சலையில் சிரமதானம் செய்ய. நான் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன், முற்றாக மறுத்தால் பெரும்பான்மை ஒதுக்கிவிடும். அதனையும் மனத்தில் கொண்டு சரி என புறப்பட்டேன்.

குருணாகலில் இருந்து கிட்டத்தட்ட 10 Km தூரம் உள்ளுக்குள் செல்ல வேண்டும். நாம் சென்ற வாகனத்தை எமது நிறுவன அனுராதபுர கிளை முகாமையாளர் குருணாகல் வீட்டில் நிறுத்தி விட்டு அவருடன் நாம் உழவு இயந்திரத்தில் புறப்பட்டோம் சிறுத்தைக் காட்டுக்குள். காடு அடர் காடு. 40 Km இக்கும் மேல் பயணம். வேடர் வாழும் காடு அது. இறுதியில் உழவு இயந்திரம் ஒரு மலையடி வாரத்தில் நிறுத்தப்பட்டது.
சில்காற்று உடலை வருடி செல்ல, முற்றாக நவீன உலகுடன் தொடர்பே இல்லாத உலகம் எம்மை அரவணைத்தது. மலையடிவாரத்தில் இருந்து மேலே Man vs Wild ப்ரோகிராமில் வரும் உத்திகளை கையாண்டு மலை உச்சிக்கு ஒற்றையடி பாதையில் ஏறிப் போனோம். மலை என்று சொல்வதை விட குன்று எனும் பதம் சிறப்பாய் இருக்கும். அக்குன்றில் மேலே கல் இடைவெளிகளுக்கு மத்தியில் சிறிய பன்சல அது சில நுற்றாண்டு காலம் பழமை வாய்ந்த சிற்பங்களுடன் கூடிய புத்த கோவில். அங்கு எமக்கு வழங்கப்பட்ட பணி கோவிலுக்கு போகும் பாதையை செப்பனிட வேண்டும்.
மிகவும் ரம்மியமான காலநிலையுடன் நாம் எமது வேலையை செய்தோம்.
மலையடிவாரத்தில் கொட்டப்பட்ட 15 கியுப் சிவப்பு மணலை கொண்டு 50M நீளமான பாதை அமைக்க வேண்டும். முதலில் வேலை இலகுவாக இருந்தாலும் மேலே போகப் போக சப்பா .....

புதிதாக போட்ட பாதை என்பதாலும் உயரத்துக்கு தள்ளவேண்டி இருந்ததாலும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மண்ணைப் போட்டு கிட்டத்தட்ட ஒரு 15 M போட்டு அன்றைய வேலையை முடித்தோம். அதன் பின்பு ஒரு தெளிந்த நீர் கொண்ட ஓடும் குளிர் அருவியில் ஒரு மணித்தியாலம் மேல் குளியல் போட்டு வெளி வர விருப்பின்றி யானையின் பிளிறல் ஒலி கேட்க விகாராதிபதி யானை வருது எண்டதும் அருவியில் இருந்து எப்பிடி விகாரைக்கு வந்தோம் எண்டு தெரியாது விகாரைக்கு வந்து சேர்ந்தோம்.
வெண் நிலவொளியில் தாமரை இலையில் கிரிபத்தும் (வெண்சோறு) கட்டை சாம்பலும் உடல் அலுப்புக்கு தேவாமிர்தம் போல ஒரு பிடி பிடித்து அமத்துரு (தலைமை புத்த பிக்கு)வின் போதனை கேட்டு பின் உறங்கசென்றோம். உண்மையில் அவர் ஒரு வித்தியாசமான ஒருவர் உண்பது பிச்சை எடுத்து. பிச்சை கேட்டு சென்று தான் உண்கிறார். இரவு உணவின் பின் அவர் என்னுடன் சிங்கள தமிழில் கதைத்தார். சிறந்த அறிவுரைகள் தந்தார். என்னை வாயை மூடி காதால் கதைக்க சொன்னார். சித்தர் வாக்கு போல இருந்தது. கருத்துக்கள் பல கொண்ட பேச்சு.

அடுத்த நாள் காலை மரவள்ளி கிழங்கும் பச்சை மிளகாயும் சாப்பாடு. சாப்பாடு முடிந்ததும் அங்கு கூடி இருந்த எல்லா மக்களுடன், வேடுவர் உள்ளடங்கலாக எம்முடன் வந்து மிகுதி வேலை வேலை செய்ய உதவினர். வேலை பாத்துக் கொண்டிருக்க முடிந்தது. வேலை 11.00 மணியளவில் முடிந்ததும் நாயக்க ஆமத்துரு சிறு சொற்பொழிவு ஆற்றினார். அதன் சாராம்சம் வருமாறு. “இந்த வேலை ஒரு பக்கோ இயந்திரத்தை கொண்டு செய்வது பெரிய வேலை இல்லை, வேலை உடன் முடிந்து விடும். ஆனால் அதில் ஒரு திருப்தி இருக்காது. நீங்கள் இப்பாதை பயன் படுத்தும் போது உங்களுக்கு ஒரு மன மகிழ்வு உண்டாகும்”  அவர் சொல்லுறதும் சரிதான்.
போட்ட பாதைய பாக்கும் போது ஒரு நிறைவு வருது தான். இனிதேமுடிந்து திரும்பினோம் நாம். 

No comments: